உங்க பிசினஸில் நியாயமான நடைமுறை இல்லை! மெட்டாவுக்கு ரூ.213 கோடி அதிரடி அபராதம்
புதுடில்லி; மெட்டா சமூக ஊடக நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் ரூ.213 கோடி அபராதத்தை அதிரடியாக விதித்துள்ளது.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ் அப், திரட்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு வாட்ஸ் அப் தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி வாட்ஸ் அப் உபயோகிப்பாளர்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள், பேஸ்புக் நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டன. இது சமூக வலைதள சந்தையில், போட்டி சமநிலையை பாதிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்தது; வாட்ஸ் அப்பில் இந்த செயலால், மற்ற சமூக வலைத்தளங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இது பற்றி, competition commission எனப்படும் போட்டிச் சமநிலையை உறுதிப்படுத்தும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இதில், உபயோகிப்பாளர்களின் தகவல்கள் வாட்ஸ் அப் மூலம் பேஸ்புக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை ஆணையம் உறுதி செய்தது.
இதை எடுத்து மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213.14 கோடி அபராதத்தை போட்டி ஆணையம் விதித்துள்ளது. போட்டியை உறுதி செய்யும் வகையிலான தீர்வுகளை மெட்டா, வாட்ஸ் அப் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப்க்கு எதிரான இந்த நடவடிக்கை அந்நிறுவனத்துக்கு பெரிய பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.