கூலி தொழிலாளி உடலை சாலையில் வீசிய கொடூரம்
மங்களூரு: பணியாற்றும்போது இறந்த கூலி தொழிலாளியின் உடலை, சாலை ஓரத்தில் உரிமையாளர் போட்டுச் சென்றது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தட்சிண கன்னடா, புத்துாரின் சிக்கமட்னுார் கிராமத்தில் வசித்தவர் சிவப்பா, 70. இவர் கூலி வேலை செய்து வந்தார். புத்துாரில் தொழிற்சாலை நடத்தி வரும் ஹென்றி என்பவர், கட்டுமான பணிக்காக சிவப்பாவை அழைத்துச் சென்றார்.
வேலை செய்தபோது, உடல்நிலை பாதிக்கப்பட்ட சிவப்பாவை, உரிமையாளர் ஹென்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. இம்மாதம் 16ம் தேதி, சிவப்பா இறந்துவிட்டார். இது பற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவலும் கூறவில்லை.
சிவப்பாவின் உடலை, வாகனத்தில் கொண்டு வந்து, அவரது வீட்டு அருகில் சாலை ஓரத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். சிவப்பாவின் உடலை, அவரது மனைவியும், மகளும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடலை வீட்டுக்கு கொண்டு சென்றனர். ஹென்றியின் மனிதாபிமானமற்ற செயலை, பல்வேறு அமைப்பினர் கண்டித்தனர். ஹென்றியை கைது செய்யும்படி வலியுறுத்தினர்.
தனக்கு எதிராக மக்கள் கொதித்தெழுவதால், அவர் தலைமறைவாகி விட்டார். இது குறித்து, போலீசாரிடம் புகார் அளிக்கவும் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.