நந்தியம்பாக்கம் ரயில்வே பாலத்திற்கு விமோசனம்; இருபுறமும் இணைப்பு சாலை பணிகள் வேகம்

மீஞ்சூர்; அத்திப்பட்டு - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலம் அமைக்கப்பட்டு, இருபுறமும் இணைப்பு சாலை அமைவதில், ஆறு ஆண்டுகளாக இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் துவங்கப்பட்டு உள்ளதால், 20 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளது.

சென்னை சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், அத்திப்பட்டு - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி., -- 14 ரயில்வே கேட் உள்ளது. இது. மீஞ்சூர் அடுத்த புங்கம்பேடு - நந்தியம்பாக்கம் சாலையில் அமைந்துள்ளது.

நீண்டகால கோரிக்கை

இந்த ரயில் தடத்தில், தினமும் விரைவு, சரக்கு மற்றும் புறநகர் என, 200க்கும் அதிகமான ரயில்கள் சென்று வருவதால், இந்த ரயில்வே கேட் வழியாக நந்தியம்பாக்கம், கொள்ளட்டீ, தமிழ்கொரஞ்சூர்.

மவுத்தம்பேடு, செப்பாக்கம் உள்ளிட்ட, 20 கிராமங்களைச் சேர்ந்தோர் மீஞ்சூர், பொன்னேரி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

கிராமவாசிகளின் நீண்டகால கோரிக்கையின் பயனாக, 2018ல் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 44.50 கோடி ரூபாயில், இங்கு ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே, ரயில்வே எல்லையில் துாண்கள் அமைத்து அதன் மீது ஓடுபாதை கட்டி முடிக்கப்பட்டன. பாலப் பணிகள் முடிந்த நிலையில், அதற்கு இருபுறமும் இணைப்பு சாலைக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்த பாலத்திற்கு அணுகுசாலை அமைப்பதற்காக, நந்தியம்பாக்கம் மற்றும் புங்கம்பேடு சாலையில், வீடு மற்றும் கடைகள் என, 45 கட்டங்களில், 7,433 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இவற்றிற்கான இழப்பீடு வழங்கும் பணிகள் இழுபறியாக இருந்து வந்தது.

துரித பணிகள்

கிராமவாசிகளின் தொடர் கோரிக்கை மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, நில எடுப்பு பிரிவு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர், இழப்பீடு வழங்கும் பணிகளை துரிதப்படுத்தினர்.

நீண்ட இழுபறிக்கு பின், அப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், இணைப்பு சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கப்பட்டன.

இருபுறமும், 949 மீ., நீளம், 8.5 மீ., அகலத்தில், 20 துாண்களுடன் அமையவுள்ளது. தற்போது, சோதனை துாண் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அடுத்தகட்ட பணிகள் வேகம் எடுத்துள்ளன.

நீண்ட இழுபறிக்கு பின், ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளதால், 20 கிராமங்களுக்கு விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளது.

இது குறித்து நந்தியம்பாக்கம் சமூக ஆர்வலர் எஸ்.ரமேஷ் கூறியதாவது:

ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில் நீண்ட நேரம் காத்திருந்து சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம்.

அவசர பணியின் காரணமாக, இருசக்கர வாகனங்களில் செல்வோர், ரயில்வே கேட்டின் இடுக்குகளில் புகுந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்வதும் தொடர்கிறது.

இணைப்பு சாலை பணிகள் துவங்கபட்டு உள்ளதால், நிம்மதி அடைந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து திட்ட அதிகாரி கூறியதாவது:

இந்த இணைப்பு சாலையானது, இருவழி பாதை கொண்டது. பக்கவாட்டு பகுதிகளிலும், குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு வசதியாக, சாலைகள் அமைக்கப்பட உள்ளன.

விரைவில் முடியும்

மழைநீர் செல்வதற்கு கால்வாய் அமைய உள்ளது. தற்போது, புங்கம்பேடு பகுதியில் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.

நந்தியம்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்க முயன்றபோது, இழப்பீடு பெற்ற குடியிருப்புவாசிகள் வீடு, கடைகளை காலி செய்ய சில நாட்கள் அவகாசம் கோரியுள்ளனர்.

அதனால், அங்கு பணிகள் நடைபெறவில்லை. அடுத்த சில நாட்களில் பணிகளை துவங்கிவிடுவோம். இரண்டாண்டு ஒப்பந்த காலம் என்பதால், 2026 ஜூலையில் பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement