மீஞ்சூர் - வல்லுார் சாலையில் மீடியன் அமைக்கும் பணி 'விறுவிறு'

மீஞ்சூர்; மீஞ்சூர் - வல்லுார் இடையேயான, மாநில நெடுஞ்சாலை வழியாக, தினமும் 20,000க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகின்றன.

காட்டுப்பள்ளியில் உள்ள எண்ணுார் துறைமுகம், அதானி துறைமுகம், அத்திப்பட்டு புதுநகரில் உள்ள பெட்ரோல் மற்றும் எரிவாயு முனையங்கள், நிலக்கரி கிடங்கு, சாம்பல் கிடங்கு ஆகியவற்றிற்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

தற்போது, இச்சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. மழைக்காலங்களில் வாகனங்கள் பெரும் சிரமத்துடன் பயணித்து வருகின்றன.

போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்த சாலையால், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம், கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து, கடந்தாண்டு மீஞ்சூர் - வல்லுார் இடையே, 3 கி.மீ., தொலைவிற்கு சாலையை சீரமைக்க, 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிகளவில் கனரக வாகன போக்குவரத்து இருப்பதால், அவற்றின் சுமையை தாங்கும் வகையில், சாலையின் மட்டம் 2 அடிக்கு உயர்த்தி பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சாலை மட்டம் உயர்ந்ததால், ஏற்கனவே அங்கிருந்த கான்கிரீட் மீடியன்கள் தாழ்வான நிலைக்கு சென்றன. தற்போது, கான்கிரீட் கட்டுமானங்களில் துளைபோட்டு, இரும்பிலான மீடியன்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலகம், ரமணா நகர், புங்கம்பேடு ஆகிய பகுதிகளில் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழக்கமாக, மீடியன்கள் கான்கிரீட் கட்டுமானத்தில் அமைக்கப்படும் நிலையில், தற்போது இரும்பு தளவாடங்களால் அமைக்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இப்பணிகள் முடிவடையும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement