பாகூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் சென்டர் முதல்வர் ரங்கசாமி திறந்து வைப்பு

பாகூர்: பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் , இ.சி.ஜி., மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவிகளை, முதல்வர் ரங்கசாமி பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

புதுச்சேரி சுகாதார துறை சார்பில், கருவுற்ற தாய்மார்களின் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பிரசவத்திற்கு முந்தைய பராமறிப்பை உறுதிப்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ், இந்தியாவில் முதன் முறையாக புதுச்சேரியில் பாகூர், அரியாங்குப்பம், லாஸ்பேட்டை உள்ளிட்ட 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மூன்று சமுதாய நல வழி மையங்களிலும், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழா, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடந்தது.

விழாவில், சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஆனந்தலட்சுமி வரவேற்றார். இயக்குனர் டாக்டர் செவ்வேல் முன்னிலை வகித்தார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், மற்றும் இ.சி.ஜி. பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.

ஒவ்வொரு மாதமும் 9 மற்றும் 24 ஆகிய தேதிகளில், புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து மகப்பேறு மருத்துவர்கள் வர வழைக்கப்பட்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளது.

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் ஆனந்தவேல் நன்றி கூறினார். பாகூர் ஜமுனாரவி தொகுப்புரையாற்றினார்.

Advertisement