'ரூ. 9 கோடி மதிப்பில் புதிய கட்டடம்' முதல்வர் ரங்கசாமி தவகல்
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், இ.சி.ஜி., பரிசோதனை மையத்தை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து பேசியதாவது;
இந்திய அளவில், எந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இது போன்ற ஸ்கேன் கருவிகள் கிடையாது.
இந்தியாவில் புதுச்சேரியில் தான் முதல் முறையாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில், கர்ப்பிணி தாய்மார்களின் நலனுக்காக ஸ்கேன் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு குழு ஒன்று, புதுச்சேரி முழுவதும் ஆய்வு செய்தார்கள். அந்த குழுவினர் இந்திய அளவில் புதுச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் தான் மிக சிறப்பாக உள்ளதாகவும், அதுவும் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதன் மூலமாக, புதுச்சேரி அரசு எந்த அளவிற்கு சுகாதார துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். பாகூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, 9 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
புதுச்சேரி மக்களுக்கு சிறப்பு மருத்துவம் கொடுக்கவும், புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்த அதற்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.