தெய்வானையா இப்படி செய்தது?
திருச்செந்துார் கோவில் யானையால் தாக்கப்பட்டு இரண்டு பேர் இறந்து போன சம்பவத்திற்கான காரணத்தை யார் மீது போடலாம் என இரண்டு நாட்களாக யோசித்துக் கொண்டு இருக்கின்றனர்.
ரொம்பவும் யோசித்தால் முதல் காரணம் பக்தர்களாகிய நாமாகத்தான் இருப்போம்.
சம்பவத்திற்கு காரணமான தெய்வானை மனஅழுத்தத்தில் இருப்பதால் அதனை புத்தாக்க முகாமிற்கு அனுப்பலாமா? என யோசித்துக் கொண்டிருக்கின்றனராம்.
தெய்வானையின் பூர்வீகத்தை விசாரித்தால் அது புத்தாக்க முகாமிலேயே யானைப்பாகன்களை துாக்கிப்போட்டு காயப்படுத்தியுள்ள சரித்திர பதிவேடுகள் உள்ளது.
அப்போது ஏன் புத்தாக்க முகாமிற்கு அனுப்பப்பட்டது என்றால் கொஞ்ச காலம் திருப்பரங்குன்றத்தில் இந்த யானை வாசம் செய்தபோது அங்கு இருந்த பாகன் காளிதாசைக் தாக்கி அவர் இறந்ததன் காரணமாகவே புத்தாக்க முகாமிற்கு அனுப்பப்பட்டது.
இந்த யானை உங்களுக்கு சரிப்பட்டு வராது! எங்களிடமே திருப்பியனுப்புங்கள் என, இதனை அனுப்பிவைத்த அசாம் வன இலாகாவினர், தமிழத்தைக் கேட்டுக் கொண்ட போது, இல்லையில்லை நாங்கள் தங்கத்தாம்பளத்தில் வைத்து இந்த யானையை இனி பராமரிப்போம் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சி கேட்டு திருச்செந்துாரில் வைத்து பராமரித்தனர்.
அதே போல அதற்கு ஷவருடன் கூடிய நீச்சல் குளம் கட்டி குளிக்கவைத்து அதனை போட்டோ பிடித்துப் போட்டு இப்போது யானையைப் பாருங்கள் எவ்வளவு குதுாகலமாக இருக்கிறது என்றனர் ஆனால் அந்த யானையைக் கேட்டால் அல்லவா தெரியும் தான் குதுாகலமாக இருக்கிறேனா? இல்லையா? என்று..
இது தொடர்பாக வரும் படங்களைப் பார்த்தாலே தெரிகிறது மிகப்பெரிய இரும்பு சிறைச்சாலையில்தான் யானை இருந்திருக்கிறது.
அது காலை மாலை வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் அழகே அழகு என்பர், அது எங்கே ஆசீர்வாதம் வழங்கியது பாகன்களின் பண ஆசையால் தும்பிக்கையில் குத்தப்படும் அங்குச குச்சிக்கு பயந்து தும்பிக்கையை துாக்கி தலையில் வைதது, அதே தும்பிக்கையால் பக்தரிடம் இருந்து பணத்தை யாசகமாகக் கேட்டு வாங்கி பாகன்களிடம் கொடுக்கும், இதில் எங்கே அழகே அழகு இருக்கிறது.
ஆசீர்வாதம் வாங்கவரும் பக்தர்களிடம் இருந்து பணத்தை மட்டுமே அந்த யானை பெறவில்லை, ஒவ்வொருவரின் அழுக்குப்பிடித்த, பல்வேறு எண்ணெய் பிசுக்குகள் இருந்த தலைக் கிருமிகளையும் சேர்தல்லவா தன் தும்பிக்கையில் தேவையின்றி வாங்கியது,இதன் விளைவு யானையின் மென்மையான தும்பிக்கையின் முன்பாகம் புண்ணாகிப்போனது.அது கொஞ்சம் கொஞ்சமாக தோல் நோயாக பரவி பூஞ்சையாக வளர்ந்து முதுகு கால் தோல் எல்லாம் பரவியது
அது போதாது என்று சுந்தரமூர்த்தி நாயனாருக்கு வெள்ளை யானையாக சிவன் காட்சிதந்தாராம்,அதை நினைவு படுத்துகிறோம் என்று சொல்லி அந்த நாளில் இந்த தெய்வயானையின் உடம்பு முழுவதும் அரிசி மாவு,திருநீறு பூசி வெள்ளையானையாக வலம் வரச்செய்து படாய்ப்படுத்துவர்.
ஆனால் இதை சொன்னால் பாகன்கள் விட்டுவிடுவார்களா? இல்லையில்லை யானைக்கான மருத்துவர்கள்தான் இது கூடாது என்று தடை செய்யப்போகிறார்களா?
ராஜராஜன் காலத்தில் இருந்தே இந்த நடைமுறை இருக்கிறது என்று சப்பைக்கட்டு கட்டுவர்.
கோவில் உண்டியில் வருமானம் கொட்டினாலும் அதில் தெய்வானைக்கு நிர்வாகம் செலவு செய்யது போலும், யானை பராமரிப்புக்கென தனி உண்டியல் வைத்து தனியாக வசூல் செய்து வருகின்றனர், ஆனாலும் யானை பாவம், பக்தர்கள் யாராவது பழம் கொண்டு வருவார்களா என ஏக்கத்தோடு பார்க்கும், பக்தர்களும் 'கணேசனுக்கு' கொடுக்கிறோம் என்று சொல்லி அன்பின் மிகுதியால் சுத்தம் செய்யப்படாத பழம்,காய்கறி,கீரைகளை கொடுத்து யானையை மேலும் நோயாளியாக்கினர்.
பாகன்களின் முக்கியமான வேலையே யானைக்கு சாப்பாடு போடுவதுதான் ஆனால் யானை புகாரா செய்யப்போகிறது? என்று ஆளாளுக்கு பிசியாகிவிட மூன்றாவது உதவி பாகனான
உதயகுமார் தன் உறவினரான சிசுபாலன் என்பவரிடம் அந்த வேலையைக் கொடுக்க அவர் உணவு கொடுத்த கையோடு தும்பிக்கைக்கு முத்தம் கொடுத்தும் யானை மீது சாய்ந்தும் பல்வேறு விதங்களில் போஸ் கொடுத்தபடி செல்பி எடுத்துள்ளார்.
ஓரு கட்டத்தில் பொறுக்கமுடியாத யானை தும்பிக்கையால் கடுமையாக தள்ளிவிட்டிருக்கிறது, என்ன செய்கிறாய் என்று கேட்டு பாகன் உதயகுமார் யானையிடம் 'குழந்தையை' அடக்குவது போல அடக்க முயற்சி செய்ய, நான் குழந்தையுமில்லை, ஆறறிவு படைத்த மனிதனுமில்லை, நான் ஒரு மிருகம் என்பதை நினைவில் கொள் என்று சொல்லாமல் சொல்லும் விதத்தில் உதயகுமாரையும் ஒரு எத்துவிட இருவரும் ஏக காலத்தில் அடிபட்டு விழுந்தனர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஒடிவந்து யானையின் காலடியில் கிடந்த இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதற்குள் இருவரது உயிரும் அடங்கிப் போயிருந்தது.
இப்போது அனைத்து உயரதிகாரிகளும் திருச்செந்துாரில் முகாமிட்டுள்ளனர்.,வந்ததற்கு அடையாளமாக ஆளாளுக்கு ஒரு வாதத்தை வைத்து வருகின்றனர்.இன்னும் சிசிடிவி காட்சிகள் வெளியே வரவேண்டியிருக்கிது ஆக எப்படியும் இந்த விஷயம் இன்னும் ஒரு வாரத்திற்கு ஓடும்.தெய்வானையை எனக்கு நன்கு தெரியும் அதுவா இப்படிச் செய்தது என்று ஆச்சரியத்துடன் சிலர் கேள்வி கேட்கின்றனர் தெய்வானை என்று இல்லை எந்த யானையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் இறுக்கம் அதிகமாகும் போது இப்படித்தான் நடந்து கொள்ளும் இது யானை வைத்துள்ள மற்ற கோவில் நிர்வாகத்திற்கு ஒரு எச்சரிக்கை மணியும் கூட.
உருப்படியாக உடனே நடந்துள்ள விஷயம், இனி எங்கள் கோவில் யானை யாரையும் ஆசீர்வாதமும் செய்யாது உணவும் பெறாது என்று நெல்லையப்பர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளதுதான்.இருப்பதை வைத்து சிறப்புடன் நடத்துவோம் என முடிவெடுத்துள்ளனர்.
தங்கக்கூண்டிலேயே அடைத்தாலும் அது கூண்டுதான்.
உயிர்களை அதனதன் வாழ்விடத்தில் இயற்கையோடு, இனத்தோடு, இணைந்து, இயைந்து வாழ விட்டுவிடுங்கள் அதுவே உயிர்களுக்கு செய்யும் பெரும் மரியாதை.
-எல.முருகராஜ்