பதிவு செய்த ஆவணத்தை தர பேரம் பேசிய சார் பதிவாளர்

காரைக்குடி: காரைக்குடியில் லஞ்சம் வாங்கி கைதான சார் பதிவாளர் முத்துப்பாண்டி, பதிவு செய்த ஆவணத்தை கொடுக்க முதலில் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டு, பின்னர் ரூ.60 ஆயிரம் ஆக குறைத்தது தெரியவந்துள்ளது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வருபவர் வைரவேல். இவர் 2020ம் ஆண்டு வாங்கிய 5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார். காரைக்குடி இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய, ஆவண எழுத்தர் புவனப்பிரியாவை அணுகி உள்ளார். அவர் பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளருக்கு கொடுக்க ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார். அதற்கு வைரவேல் மறுப்பு தெரிவித்தார். இதனால், பத்திரத்தை தயார் செய்யாமல் புவனப்பிரியா இழுத்தடித்தார்.
இதனால் 12ம் தேதி வைரவேல் மீண்டும் புவனப்பிரியாவை சந்தித்து பத்திரப்பதிவு ஆவணம் குறித்து கேட்டதற்கு அவர், சார் பதிவாளர் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறினார்.

இதனையடுத்து அலுவலகம் சென்று சார் பதிவாளர் முத்துப்பாண்டியை நேரில் சந்தித்த வைரவேல், பத்திரப்பதிவு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பத்திரப்பதிவு ஆவணம் தொடர்பாக முத்துப்பாண்டி கூறிய சில தகவல்களுக்கு வைரவேல் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து புவனப்பிரியா சொல்வது போல் செய்யும்படியும், மறுநாள் பத்திரம் பதியலாம் எனக்கூறி வைரவேலை சார்பதிவாளர் அனுப்பி வைத்தார்.

மறுநாள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற வைரவேலை சந்தித்த புவனப்பிரியா, பத்திரப்பதிவுக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வேண்டும் என முத்துப்பாண்டி கேட்பதாக கூறியுள்ளார்.

பணம் இல்லை என வைரவேல் கூறவே, பத்திரத்தை பதிவு செய்த முத்துப்பாண்டி அதனை ரிலீஸ் செய்யவில்லை.
மறுநாள் பத்திரத்தை கேட்ட போது லஞ்சம் தராததால் ஆவணத்தை நிலுவையில் வைத்துள்ளதாகவும், பணத்தை கொடுத்தால் மட்டுமே ஆவணத்தை ரிலீஸ் செய்ய முடியும் எனக்கூறியுள்ளார்.

அதற்கு, அவ்வளவு பணம் இல்லை, ரூ.1 லட்சம் கொடுக்க முடியாது. பணத்தை குறைத்து கொள்ளும்படி வைரவேல் கூறியுள்ளார். இதனையடுத்து ரூ.60 ஆயிரத்தை புவனப்பிரியாவிடம் கொடுத்துவிட்டு ஆவணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார். புவனப்பிரியாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டுகேட்டபோது, பணத்தை கொடுத்தால் ஆவணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனக்கூறியுள்ளார்.

இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத வைரவேல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். பிறகு, பத்திரப்பதிவு அலுவலகம் சென்று முத்துப்பாண்டியிடம் ரூ.60 ஆயிரம் லஞ்சப்பணத்தை வைரவேல் கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்துப்பாண்டியையும், அவருக்கு உதவியாக இருந்த புவனப்பிரயாவையும் கைது செய்தனர்.
பதிவு செய்த பத்திரத்தை தருவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதும், பின்னர் அதை 60 ஆயிரம் ரூபாயாக குறைத்ததும், இப்போது அம்பலம் ஆகியுள்ளது.

Advertisement