3 நாட்களாக தாய்லாந்தில் தவிக்கும் 'ஏர் இந்தியா' விமான பயணியர்

பாங்காக்,தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து, கடந்த 16ம் தேதி ஏர் இந்தியா விமானம் டில்லி புறப்பட இருந்தது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆறு மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்பின், விமானத்தில் பயணியர் ஏற்றப்பட்டனர். எனினும், கோளாறு சரி செய்யப்படாததால், மீண்டும் அவர்கள் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து, விமானம் தயாராகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு பயணியர் விமானத்தில் ஏற்றப்பட்டனர். விமானமும் புறப்பட்டது. ஆனால், மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் புக்கெட் நகரில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணியருக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படாததால், மூன்று நாட்களாக புக்கெட் நகரிலே இருப்பதாக பாதிக்கப்பட்ட பயணியர், சமூக வலைதளங்களில் குற்றஞ்சாட்டினர்.

ஏர் இந்தியா நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், 'தொழில்நுட்ப கோளாறு காரணமாக டில்லி நோக்கி வந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதில் வந்த பயணியருக்கு தங்குவதற்கு அறை, உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'சிலர், மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement