நக்சல் தலைவர் விக்ரம் கவுடா உடுப்பி அருகே சுட்டுக்கொலை
உடுப்பி,
நக்சல் இயக்க தலைவர் விக்ரம் கவுடா, உடுப்பியில் நக்சல் ஒழிப்பு சிறப்பு படையினரால், என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், கூட்லு நட்வலு கிராமத்தை சேர்ந்தவர் விக்ரம் கவுடா, 46. நான்காம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர், கூலி தொழிலாளியாக வேலை செய்தார். நக்சல் அமைப்பில் சேர்ந்த இவர், அரசுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இவர் மீது கர்நாடகா மட்டுமின்றி, தமிழகம், கேரளாவில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இவரை பிடிக்கும் முயற்சிகள், 20 ஆண்டுகளாக நடந்தன. மூன்று முறை போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். 'இவர் இருக்கும் இடத்தை தெரிவிப்போருக்கு, 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்' என, போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உடுப்பி கபினாலே வனப்பகுதியில் நக்சல் தலைவர் விக்ரம் கவுடா, லதா, ராஜு உட்பட 10 பேர் பதுங்கி இருப்பதாக நக்சல் ஒழிப்பு படையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இரவு, அப்பகுதிக்கு அவர்கள் சென்ற போது, நக்சல்கள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில், விக்ரம் கவுடா கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடி விட்டனர்.
சம்பவ இடத்தை பார்வையிட்ட உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐ.ஜி., ரூபா கூறுகையில், ''கர்நாடகாவில் மிகவும் தேடப்படும் நபராக இருந்த விக்ரம் கவுடா, என்கவுன்டரில் கொல்லப்பட்டார். அவர் மீது கொலை, மிரட்டல் உட்பட 41 வழக்குகள் உள்ளன. விக்ரம் கவுடாவுடன், ஐந்தாறு பேர் இருந்தனர். தப்பியோடிய அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டை தொடரும்,'' என்றார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், ''நக்சல்களை சரணடைய செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றவர்களை போன்று, சாதாரண வாழ்க்கை வாழ நினைத்தால், அவர்களுக்கு அரசு உதவும். தப்பியோட முயற்சித்தால், இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியாது,'' என்றார்.