பள்ளிக்கு வராத மாணவர்களின் பெற்றோருக்கு விழிப்புணர்வு
திருவாடானை: பள்ளிக்கு வராமல் ஆப்சென்ட் ஆகும் மாணவர்கள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
தொண்டி அருகே பாசிபட்டினம் அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கு வராமல் நான்கு மாணவிகள் கிராமத்தில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இரண்டு மாணவிகள் இறந்தனர்.
மாணவர்கள் பள்ளிக்கு தவறாமல் வர வேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று அப்பள்ளியில் பெற்றோர் முன்னிலையில் விழிப்புணர்வு கூட்டம் வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி தலைமையில் நடந்தது.
அவர் பேசியதாவது:
பெற்றோர் தங்களது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை கண்காணிக்க வேண்டும். அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு கல்வி மிகவும் முக்கியம். அதை விடுத்து சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள்.
அது தண்டனைக்குரிய குற்றமாகும். இனிவரும் காலங்களில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பினால் குழந்தை தொழிலாளர் நலத் திட்ட அலுவலகத்தில் புகார் செய்யப்படும் என்றார்.