பரமக்குடி வைகை ஆற்று பாலத்தில் மணல் குவியல்; மழைநீர் தேங்குவதால் ஆபத்து

பரமக்குடி : பரமக்குடி வைகை ஆற்றுப் பாலத்தில் குப்பை மற்றும் மணல் குவிந்துள்ளதால் மழைநீர் வெளியேறும் குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

பரமக்குடியில் இருந்து ஆற்றின் மறு கரைக்குச் செல்ல வைகை ஆற்று மேம்பாலம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது. இந்த பாலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு உயர்த்தி கட்டப்பட்ட நிலையில் இரு புறங்களிலும் பாதசாரிகள் நடக்க வழி அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அவ்வப்போது பாலத்தில் குழிகள் ஏற்படுவதுடன் செடி, கொடிகள் முளைப்பதை தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்தமாக சீரமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் நடந்தது.

தற்போது பாலம் முழுவதும் மஞ்சள்பட்டணம் சுடுகாட்டிற்கு செல்லும் இறுதி யாத்திரையின் போது துாவப்பட்ட பூக்கள் நிறைந்துள்ளது. அத்துடன் குப்பை மற்றும் மணல் மேடுகளால் மழை நீர் வழிந்தோட அமைக்கப்பட்ட குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது.

இதனால் பாலத்தின் உறுதி தன்மை கேள்விக்குறியாகும் நிலையில் உடனடியாக அனைத்து குப்பை மற்றும் மணல் மேட்டை அகற்ற வேண்டும். ஆண்டு முழுவதும் பாலம் துாய்மையாக இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதுடன், துறை அதிகாரிகளும் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement