ஆவணப்பட விவகாரம் ; தனுஷை தவிர்த்த நயன்தாரா

8

சென்னை: தனது திருமணம் குறித்த ஆவணப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கிய தயாரிப்பாளர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துக் கொண்டார்.


நடிகை நயன்தாரா அண்மையில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், தனது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட்டான 'நானும் ரவுடி தான்' படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் பயன்படுத்த அவர்கள் விரும்பினர்.


ஆனால், முறையான அனுமதி கேட்கவில்லை என்று கூறி அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். மேலும், அந்த ஆவணப்படத்தில் 3 வினாடி காட்சிகளைப் பயன்படுத்துவதற்கு ரூ.10 கோடி அபராதம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால், தனுஷை விமர்சித்து நேரடியாக நயன்தாரா அறிக்கை விட்டார். இதற்கு, பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். இது தமிழ் சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த ஆவணப்படத்தை பிரபல ஓ.டி.டி., தளமான நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்கு நடிகை நயன்தாரா, ஒரு பெரும் தொகைக்கு விற்று விட்டதாகவும் சொல்லப்படுகிறது.


இந்த நிலையில், தனது ஆவணப்படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியவர்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார்.


அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளின் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு, நன்றி தெரிவித்துக் கொண்டார்.


ஹிந்தி நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான் பெயரை குறிப்பிட்டிருந்த நயன்தாரா, கே. பாலச்சந்திரன், அர்ச்சனா கல்பாத்தி, உதயநிதி உள்பட பலருக்கு நன்றி கூறியிருந்தார். நடிகர் தனுஷின் பெயரை நயன்தாரா எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

Advertisement