மேகவெடிப்பு... ராமேஸ்வரத்தை மிரட்டிய கனமழை; பரிதவித்த பாம்பன்
சென்னை: திடீர் மேகவெடிப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் கனமழை பெய்ததால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
வங்கக்கடலில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நாகை, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் பிறப்பித்துள்ளது. முதலில் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மாற்றி, ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டியுள்ளது. இதனால், காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை, மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நல்ல மழை பொழிவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, பாம்பனில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2:30 மணி வரை 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41.1 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில் 32.2 செ.மீட்டரும், பாம்பனில் 26.1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.