'நம்பர் ஒன்' ஹர்திக்; சரித்திரம் படைத்த திலக் வர்மா; டி20யில் மாஸ் காட்டும் இந்தியா
மும்பை: டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடரில் அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் தலா இரு சதங்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனர்.
அதேபோல, ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில், டி20 கிரிக்கெட் தொடருக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது. அதில், முதன்முறையாக இந்திய இளம் வீரரான திலக் வர்மா, வாழ்நாளில் சிறந்த தரநிலையை பிடித்துள்ளார். நேற்று வரை 72வது இடத்தில் இருந்த அவர், 69 இடங்கள் முன்னேறி, 3வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸி.,யைச் சேர்ந்த டிராவிஸ் ஹெட் முதல் இடத்திலும், இங்கிலாந்தில் பில் சால்ட் 2வது இடத்திலும், இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஒரு இடங்கள் பின்தங்கி 4வது இடத்திலும், பாகிஸ்தானைச் சேர்ந்த பாபர் ஆசம் 5வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் 8வது இடத்தில் உள்ளார்.
அதேபோல, ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முதலிடத்தை பிடித்துள்ளார். 2வது இடத்தில் நேபாளின் திபேந்த்ரி சிங் அய்ரி, 3வது இடத்தில் இங்கிலாந்தில் லிவிங்ஸ்டோன், 4வது இடத்தில் ஆஸி.,யின் ஸ்டொயினிஸ், 5வது இடத்தில் இலங்கையின் ஹசரங்கா ஆகியோர் உள்ளனர்.
டி20 பவுலர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இங்கிலாந்தின் அடில் ரஷித் முதல் இடத்தையும், இலங்கையின் ஹசரங்கா 2வது இடத்தையும், ஆஸி.,யின் ஆடம் ஜாம்பா 3வது இடத்தையும், வெஸ்ட் இண்டீஸின் ஹொசென் 4வது இடத்திலும், இலங்கையின் தீக்ஷானா 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். ரவி பிஷ்னோய், அர்ஸ்தீப் சிங் ஆகியோர் 8 மற்றும் 9வது இடத்தை பிடித்துள்ளனர்.
அணிகளைப் பொறுத்தவரையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.