கார்த்திக்-நர்மதா ஜோடி தங்கம் * துப்பாக்கிசுடுதலில் தமிழகம் அபாரம்

புதுடில்லி: தேசிய துப்பாக்கி சுடுதலில் தமிழகத்தின் கார்த்திக் சபரி ராஜ், நர்மதா ஜோடி கலப்பு பிரிவில் தங்கம் கைப்பற்றியது.
இந்தியாவில், தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 67வது சீசன் நடக்கிறது. மத்திய பிரதேசத்தின் போபாலில் 10 மீ., ஏர் ரைபிள் கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இதன் பைனலில் தமிழகத்தின் கார்த்திக் சபரி ராஜ்-நர்மதா ஜோடி, ஒலிம்பிக்கில் பங்கேற்ற, ரயில்வேயின் அர்ஜுன் பாபுதா, உலக கோப்பை தொடரில் அசத்திய சோனம் உத்தம் மஸ்கர் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் தமிழக ஜோடி 16-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது. ரயில்வே ஜோடிக்கு வெள்ளி கிடைத்தது. .
கனேமத் அபாரம்
டில்லியில் பெண்களுக்கான ஸ்கீட் பிரிவில் போட்டி நடந்தது. பஞ்சாப் வீராங்கனை கனேமத் சேஹன், 60 வாய்ப்பில் 50 முறை இலக்கை துல்லியமாக தாக்கி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். சக வீராங்கனை அசீஸ் சினா வெள்ளி, ரைஜா தில்லான் வெண்கலம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான ஸ்கீட் பிரிவில், உலக பல்கலை., போட்டியில் சாம்பியன் ஆன பஞ்சாப் வீரர் பாவ்டேக் சிங், 54 முறை இலக்குகளை துல்லியமாக தாக்கி, முதன் முதலாக தேசிய சாம்பியன் ஆனார்.

Advertisement