சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என மத்திய அரசை கேட்க தைரியம் உள்ளதா? அன்புமணிக்கு அமைச்சர் கேள்வி
சென்னை; சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா என்று அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கோரி தமிழகம் முழுவதும் பா.ம.க.,வினர் நேற்று (டிச.24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடந்த போராட்டத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். காஞ்சிபுரத்தில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதுதானே, அதில் என்ன உங்களுக்கு பயம் என்று பேசினார்.
இந் நிலையில் அன்புமணியின் பேச்சுக்கு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?
வன்னியர் மீது தங்களுக்கு பாசம் உள்ளதுபோல் நீலிக்கண்ணீர் வடித்து நடித்திருக்கிறார் அன்புமணி. கூட்டணிக் கட்சியிடம் பிளஸ் 1 என்ற மாநிலங்களவை சீட் ஒப்பந்தம் போட்டு அந்த சீட்டை அன்புமணிக்கு மட்டுமே தாரை வார்ப்பார்கள்.
தேர்தல் நேரத்தில் மட்டும் வன்னியர்களை பகடைக்காயாக வைத்து, ராமதாஸ், அன்புமணி கூட்டணி பேரம் பேசுகின்றனர். தற்போது அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்.
மறுபடியும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினை அரசியல் சூதில் பணயம் வைத்து அரசியல் பேரத்தை வலுப்படுத்த துடிக்கிறார்கள்.
ராமதாஸ், அன்புமணியை நம்பி ஏமாறப்போவதில்லை என்பதை கடந்த லோக்சபா தேர்தலிலேயே மக்கள் தெரிவித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.