இந்திய பெண்கள் வெற்றி * சதம் விளாசினார் ஹர்லீன்

வதோதரா: இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று வதோதராவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.
ஹர்லீன் கலக்கல்
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா(53), பிரதிகா(76) நல்ல துவக்கம் கொடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 22 ரன் எடுத்தார். ஹர்லீன், தனது முதல் சதம் விளாசினார். இவர், 115 ரன்னுக்கு (16X4) அவுட்டானார். ஜெமிமா (52) கைகொடுக்க, இந்திய அணி 50 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 358 ரன் குவித்தது. ரிச்சா (13), தீப்தி (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஹேலே போராட்டம்
கடின இலக்கைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, 69/4 ரன் என திணறியது. பின் இணைந்த கேப்டன் ஹேலே, ஷிமெய்ன் இணைந்து போராடினர். 5வது விக்கெட்டுக்கு 112 ரன் சேர்த்த போது, ஷிமெய்ன் (38) அவுட்டானார். ஹேலே, ஒருநாள் அரங்கில் 7வது சதம் விளாசினார்.
இவர் 106 ரன்னில் அவுட்டாக, தோல்வி உறுதியானது. வெஸ்ட் இண்டீஸ் அணி, 46.2 ஓவரில் 243 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 115 ரன்னில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. இந்தியா சார்பில் பிரியா 3, பிரதிகா, திதாஸ், தீப்தி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

2
பெண்கள் ஒருநாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் 4 இந்திய வீராங்கனைகள் அரைசதம் அடித்த நிகழ்வு நேற்று இரண்டாவது முறையாக நடந்தது. மந்தனா (53), பிரதிகா (76), ஹர்லீன் (115), ஜெமிமா (52) என நான்கு வீராங்கனைகள் நேற்று 50 அல்லது அதற்கும் மேல் ரன் எடுத்தனர்.

43
ஒருநாள் போட்டியில் இந்தியா சார்பில் நேற்று அதிகபட்சம் 43 பவுண்டரி அடிக்கப்பட்டன. இதற்கு முன் 2017ல் அயர்லாந்துக்கு எதிராக இந்தியா சார்பில் 42 பவுண்டரி அடிக்கப்பட்டு இருந்தன.

358
நேற்று 358/5 ரன் எடுத்த இந்திய பெண்கள் அணி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ரன் சாதனையை சமன் செய்தது. முன்னதாக 2017ல் அயர்லாந்துக்கு எதிராக 358/2 ரன் எடுத்து இருந்தது.

Advertisement