நீலக்கொடி திட்டத்திற்கு எதிர்ப்பு லுாப் சாலையில் மீனவர்கள் மறியல்
சென்னை,சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தி, மாசு குறைந்த, துாய்மையான கடற்கரை என்பதற்கான நீலக்கொடி சான்றிதழ் பெற, அரசு பல்வேறு பணிகளை துவக்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக,காந்தி சிலையிலிருந்து நொச்சிக்குப்பம் கங்கா பவானி அம்மன் கோவில் வரை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலாதளம், அதற்கான நுழைவாயில் அமைக்கப்பட உள்ளதாக செய்தி வெளியானது.
இந்த பணியால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. மீனவ பஞ்சாயத்து தலைவர்கள், அப்பகுதியினருடன் பேசிக் கொண்டிருந்தனர்.
மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, கட்டுமரப் படகை லுாப் சாலையில் குறுக்கே போட்டு, மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாப்பூர் போலீசார், மீனவர்களிடம் பேச்சு நடத்தினர். 'உங்கள் பிரச்னை தொடர்பாக, மாநகராட்சி கமிஷனரை சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறேன்' என, உறுதி அளித்தனர்.
இதையடுத்து, மறியலை கைவிட்டு, மீனவர்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால், அப்பகுதியில், 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.