குப்பை வரியை குறைக்க வேண்டும் சேலம் வணிகர் சங்கத்தினர் கோரிக்கை

சேலம்:குப்பை வரியை குறைக்க வேண்டும் என, வணிகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவற்றிற்கு குப்பை வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி கடந்த காலங்களை விட, தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வணிக நிறுவனத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து, சேலம் மாநகர அனைத்து வணிகர்கள் சங்க பொதுச்செயலர் ஜெயசீலன் கூறியதாவது: குப்பை வரி சிறிய கடை, பெரிய கடைக்கு 2022-23ம் ஆண்டில் மாதந்தோறும், 100 முதல், 200 ரூபாய் வரை விதிக்கப்பட்டு இருந்தது. இதை ஆறு மாதத்திற்கு ஒரு முறை, 600 முதல், 1,200 ரூபாய் வரை கட்டி வந்தோம். அப்போது கூட, மாநகராட்சியில் இருந்து வரும் பணியாளர்கள், கடைகளில் முறையாக குப்பை எடுத்து செல்வதில்லை. ஆனால், அதிகாரிகள் வரி வசூலிக்க மட்டும் சரியாக வந்துவிடுவர்.

தற்போது ஏப்ரல் மாதத்தில் இருந்து, 3,000 முதல், 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வரை குப்பை வரி விதிக்கப்படுகிறது. 500 முதல் 600 ரூபாய் வசூல் செய்த சில இரும்பு கடைகளுக்கு, 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை குப்பை வரி விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வரைமுறை இல்லாமல் வரி விதிக்கப்படுகிறது. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பணத்தை கட்டாமல் இருக்கிறோம். கட்டணத்தை கட்ட கோரி அதிகாரிகள் மிரட்டுகின்றனர். அதேபோல் கடையை ஜப்தி செய்து விடுவோம் என்கின்றனர். இரும்பு கடைகள், தானியம், எண்ணெய், தங்க நகை, அரிசி கடைகள் உள்ளிட்டவைகளில் குப்பையே வராது. ஆனால் குப்பை வரி மட்டும் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு கூறினார்.

சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர்கள் சங்க தலைவர் சந்திரதாசன் கூறுகையில்,'' வணிக நிறுவனங்களுக்கு, குப்பை வரி வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தப்பட்டு உள்ளது. வணிகத்தில் குப்பையே வராத கடைகளுக்கு கூட, அதிகளவு குப்பை வரி விதிக்கப்படுகிறது. குப்பை வரி எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை, மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளிப்பதில்லை. வரி உயர்வால் வணிகர்கள் பாதிக்கப்படுவதுடன், உணவு பொருட்களின் விலை உயர்வுக்கும் வழிவகுக்கும். எனவே, குப்பை வரியை குறைத்து பழைய மாதிரி வாங்க வேண்டும். பிரச்னைகளை தீர்க்க, வணிகர் சங்கங்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement