பாக்., விமான தாக்குதல்: ஆப்கனில் 46 பேர் பலி

6

காபூல்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு பிராந்தியத்தில், பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் 46 பேர் பலியாகினர்.


ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ல் தலிபான் அரசு அமைந்ததில் இருந்தே பாகிஸ்தான் உடன் மோதல் போக்கு இருந்து வருகிறது. பாகிஸ்தான் அரசுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள், ஆப்கனில் முகாம் அமைத்து தங்கி இருக்கின்றனர்.

அவ்வப்போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்கு புகுந்து தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுக்கிறது.
அடிக்கடி குடைச்சல் கொடுக்கும் பயங்கரவாதிகளின் மறைவிடங்களை கண்காணித்த பாகிஸ்தான் ராணுவம், நேற்று இரவு விமானப்படை விமானங்களை கொண்டு குண்டு வீசித்தாக்கியது. இதில் 46 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து ஆப்கன் பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஷபிஹூல்லா முஜாஹித் கூறியதாவது:

ஆப்கானிஸ்தானின் பர்மல் மாவட்டத்தின் கிழக்கு பகுதியான பக்திகா மாகாணத்தில் உள்ள ஏராளமான கிராமங்களை குறிவைத்து நேற்று இரவில் பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் குடியிருப்பு பகுதி மீது விழுந்ததில் 46 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலியானவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர்.

இந்த தாக்குதலில் முர்க் பஜார் என்ற கிராமத்தில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பக்திகா பகுதியில் மேலும் 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
இப்படி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எல்லையில் தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிடுவதற்கு தலிபான்கள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாகிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement