கட்டாய கல்விமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம்: சத்குரு
சென்னை: நமது நாட்டிற்கும், குழந்தைகளுக்கும் சேவை செய்யும் வகையில் கட்டாய கல்வி முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என சத்குரு கூறியுள்ளார்.
அனைவருக்கும் கல்வி வழங்கும் நோக்கோடு, கல்வி உரிமை சட்டம் 2009ல் அமல்படுத்தப்பட்டது. இதன்படி, குறைந்தபட்சம் துவக்க கல்வி கிடைக்கும் வகையில், எட்டாம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் பாஸ் ஆக்கும் நடைமுறை 2019ல் உருவாக்கப்பட்டது.
ஆனால், 16 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தை கைவிட்டன. பள்ளிகளில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், மீண்டும் அதே வகுப்பில் படிக்கும் நடைமுறையை, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கடைப்பிடித்து வருகின்றன.
ஆனால், மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில், அனைவருக்கும் பாஸ் திட்டமே நடைமுறையில் இருந்தது. இந்நிலையில், இந்த கொள்கையில் மத்திய அரசு திடீர் மாற்றம் செய்துள்ளது. அனைவரையும் பாஸ் ஆக்கும் திட்டத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் படிக்கும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தால், அவர்கள் அதே வகுப்பில் தொடர வேண்டும். அதே நேரத்தில், இரண்டு மாதங்களுக்குள் அவர்களுக்கு மறுதேர்வு வாய்ப்பு தரப்பட வேண்டும். அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்கள் தொடர்ந்து அதே வகுப்பிலேயே தொடர வேண்டும் என அந்த அரசாணையில் கூறப்பட்டு இருந்தது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மாநிலத்தில் ஆல் பாஸ் முறையே தொடரும் எனக்கூறி இருந்தது.
இந்நிலையில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:பள்ளிகளில் இருந்து குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்கும் நல்ல நோக்கில், 'ஆல் பாஸ்' கொள்கை கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கோடிக்கணக்கான பேர், உண்மையான கல்வி கற்காத நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டதால், பாரம்பரிய தொழில்களான வேளாண்மை, தச்சு வேலை, பட்டறை வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளனர்; படித்தவர்களுக்கான வேலைகளுக்கும் அவர்கள் தகுதி பெறவில்லை.
எனவே, நாட்டுக்கும், குழந்தைகளுக்கும் பயன் தரக்கூடிய வகையில், கட்டாயக் கல்வி என்ற சிந்தனையை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. இவ்வாறு அந்த அறிக்கையில் சத்குரு கூறியுள்ளார்.