தனி ஜார்க்கண்ட் வாக்குறுதி நிறைவேற்றியவர்: வாஜ்பாய்க்கு சம்பாய் சோரன் புகழாரம்
ஜாம்ஜெட்பூர்: மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு அமையாமல் இருந்திருந்தால், ஜார்க்கண்டில் மக்கள் நீண்ட காலம் போராட வேண்டி இருந்திருக்கும் என்று முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் கூறினார்.
இன்று மறைந்த வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் விழாவில், அவருக்கு பா.ஜ., தலைவரும் முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மத்தியில் ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்படாமலிருந்திருந்தால், மாநில மக்கள் இன்னும் பல ஆண்டுகள் காத்திருந்து போராட வேண்டியிருக்கும். மேலும் பல தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்திருக்கும்.
பிரிக்கப்படாத பீகாரின் ஆர்.ஜே.டி., அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தனி ஜார்கண்ட் உருவாக்கும் வாக்குறுதியை முன்னாள் பிரதமர் நிறைவேற்றினார்.
1999ம் ஆண்டு தும்காவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அடல்ஜி, 'எனது ஆட்சி அமைக்க உதவினால், தனி மாநிலத்தை பரிசளிப்பேன்' என்று உறுதியளித்தார். மேலும் ஜார்க்கண்ட் மக்களின் பல தசாப்த கால இயக்கத்தை கவுரவித்தார்.
இவ்வாறு சம்பாய் சோரன் கூறினார்.