லிப்ட் கொடுத்து 11 பேர் கொலை: பஞ்சாபில் 'சீரியல்' கொலைகாரன் கைது
சண்டிகர்: கடந்த 18 மாதங்களில் லிப்ட் கேட்டு வந்த 11 பேரை கொலை செய்த குற்றவாளியை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் சவுரா கிராமத்தை சேர்ந்தவர் ராம் சரூப்(33). கடந்த ஆக., 18 ல் சுங்கச்சாவடியில் தேநீர் விற்கும் 37 வயது மதிக்கத்தக்க நபரை கொலை செய்த வழக்கில், இவரை ரூப்நகர் மாவட்டத்தில் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவரிடம் கொலைக்குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். ராம் சரூப், இக்கொலையை ஒப்புக் கொண்டதுடன் மேலும் 10 பேரை கொலை செய்ததாக கூறியுள்ளார்
அதில் இரவு நேரத்தில் லிப்ட் கேட்டு வருபவர்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதுடன் அவர்களிடம் இருந்து பணத்தை பறித்துள்ளார். பணத்தை தர மறுக்கும் நபர்கள் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபடும் நபர்களை தன்னிடம் இருந்த துணியால் கழுத்தை நெறித்தும், தலையில் காயத்தை ஏற்படுத்தியும் கொலை செய்தேன் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து, இதனை உறுதிப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். அதில், ஐந்து கொலை சம்பவங்கள் உறுதிபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் ஐந்து கொலைகளை உறுதிபடுத்தும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளி கூலித் தொழிலாளியாக பணிபுரிகிறார். போதைக்கு அடிமையான இவர், கொலையை செய்ததும் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதை வழக்கமாக கொண்டு உள்ளார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால்,ஓரினச் சேர்க்கை காரணமாக மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.