இரண்டாவது வெற்றி பெறுமா இந்தியா * இன்று நான்காவது டெஸ்ட் ஆரம்பம்
மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் துவங்குகிறது. இதில் வெற்றி பெற்று இந்தியா தொடரில் முன்னிலை பெற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர் கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் (பெர்த்) இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியா (அடிலெய்டு) வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்ட் (பிரிஸ்பேன்) டிரா ஆனது.
தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் மெல்போர்னில், 'பாக்சிங் டே' போட்டியாக துவங்குகிறது.
துவக்கம் மாறுமா
இந்திய அணி பேட்டர்கள் தொடர்ந்து தடுமாறுகின்றனர். பெர்த்தில் சிறப்பாக செயல்பட்ட ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி, இதன் பின் 4 இன்னிங்சிலும் ஏமாற்றியது. பின் வரிசையில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மாவும் திணறுகிறார். இதனால் வழக்கம் போல ரோகித்-ஜெய்ஸ்வால் ஜோடி மீண்டும் துவக்கம் தர வாய்ப்புள்ளது. கடைசி 13 இன்னிங்சில் ஒரு அரைசதம் மட்டும் அடித்த ரோகித், இம்முறை மீண்டு வந்தால் நல்லது.
ராகுல் 3வது இடத்துக்கு செல்லலாம். நான்காவதாக வரவுள்ள கோலி, கூடுதல் கவனத்துடன் பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். 5வது இடத்தில் ரிஷாப் பன்ட் வருவார் என்பதால், சுப்மன் கில் இடம் உறுதியில்லாமல் உள்ளது. இவருக்குப் பதில் துருவ் ஜுரல் சேர்க்கப்படலாம். பின் வரிசையில் நிதிஷ் குமார் ரன் சேர்ப்பது ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறது. எனினும், இந்திய பேட்டர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இரண்டாவது வெற்றிக்கு முயற்சிக்க முடியும்.
பும்ரா நம்பிக்கை
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, இதுவரை 21 விக்கெட் சாய்த்துள்ளார். எதிரணி பேட்டர்களுக்கு இவர் மட்டும் நெருக்கடி தர, சக பவுலர்கள் சிராஜ் (13), ஆகாஷ் (3), ஹர்ஷித் (4) பெரியளவு சோபிக்காதது அதிர்ச்சி தருகிறது. சுழலில் அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில் ஜடேஜா மீண்டும் வாய்ப்பு பெறலாம்.
போலண்ட் வருகை
ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜாவுடன், அறிமுக டீன் ஏஜ் வீரர் சாம் கொன்ஸ்டாஸ் துவக்கம் தர உள்ளார். லபுசேன், ஸ்மித்துடன், இத்தொடரில் ரன் மழை பொழியும் டிராவிஸ் ஹெட் (80, 140, 152 ரன்), காயத்தில் இருந்து மீண்டது இந்தியாவுக்கு தலைவலியாக அமையலாம். இவரை வீழ்த்த இந்திய பவுலர்கள் சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும். தவிர மிட்சல் மார்ஷ், அலெக்ஸ் கேரியும் கைகொடுக்க காத்திருக்கின்றனர்.
வேகப்பந்து வீச்சில் கேப்டன் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க்குடன், மீண்டும் போலண்ட் களமிறங்குகிறார். அடிலெய்டில் மிரட்டிய இவர், இந்திய பேட்டர்களுக்கு மறுபடியும் தொல்லை தர உள்ளார். சுழலில் லியான் அணியில் தொடர்கிறார்.