புகார் பெட்டி கோவில் முகப்பு பதாகை அகற்றப்படுமா?
மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பக்தர்கள் வழிபடுகின்றனர். 108 திவ்விய தேசங்களில், இக்கோவில் 63வதாக உள்ளது. கோவில் நுழைவாயிலில் உள்ள பழங்கால மண்டபத்தில், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், மற்ற நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்காக, விளம்பர பதாகை அமைக்கப்படுகிறது. ஆன்மிக மண்டபத்தில் அமைக்கும் பதாகையால், பக்தர்கள் அதிருப்தியடைகின்றனர்.
தற்போது மார்கழி மாத வழிபாட்டிற்கு பக்தர்கள் அதிகம் வருவதால், பதாகையை அகற்றவேண்டும். மீண்டும் பதாகை வைப்பதை தடுக்க, கோவில் சார்பில், கோவில் சிறப்புகள் குறித்த தகவல்களுடன், மண்டப வடக்கு, தெற்கு புறங்களில் நிரந்தர பதாகை அமைக்கவேண்டும்.
- - ஆர்.தங்கராஜ், சென்னை.
உயர் கோபுர மின் விளக்கு
அமைக்க வேண்டுகோள்
சித்தாமூர் அடுத்த பூரியம்பாக்கம் கிராமத்தில் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து நீர்பெயர் கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.
நீர்பெயர், பூரியம்பாக்கம், கீழ்வசலை, மேல்வசலை கிராம மக்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவியர் இந்த சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
சாலை சந்திப்பில் இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பூரியம்பாக்கம் சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - க.ஆகாஷ், சித்தாமூர்.
போக்குவரத்து இடையூறு
டாஸ்மாக் கடை மாற்றப்படுமா?
திருப்போரூர் அடுத்த கொட்டமேடு கிராமத்தில், சாலையை ஒட்டி டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு வருவோர், கொட்டமேடு- - கூடுவாஞ்சேரி சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, மது வாங்க கடைக்கு செல்கின்றனர்.
இதனால், சாலையின் அளவு குறைந்து பேருந்து, வேன், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக அளவில் விபத்துகள் நடக்கின்றன. நடந்து செல்லும் மக்கள், பள்ளி மாணவ --- மாணவியரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
- எம்.பிரபாகரன், கொட்டமேடு.
சாலையில் உலாவும்
மாடுகளால் விபத்து அபாயம்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் முதல் திருப்போரூர் செல்லும் நெடுஞ்சாலையில், சிறுதாவூர் மற்றும் ஆம்பூர் பகுதியில் உள்ள சாலையில் 200க்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன.
இந்த சாலையை பயன்படுத்தி, செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் சிறுசிறு விபத்துகளில் சிக்குகின்றனர். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, பட்டியலில் அடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.ராமகிருஷ்ணன், சிறுதாவூர்.