2026ல் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
சென்னை: 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
சென்னையில் நடந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லகண்ணுவுக்கும் நூற்றாண்டு இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்ததில்லை. நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; வாழ்த்து பெற வந்திருக்கிறேன். திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் நல்லகண்ணு. தகைசால் தமிழர் நல்லகண்ணு தனது கருத்துகளை ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்தக்கூடியவர். எங்களை போன்றவர்களுக்கு தொடர்ந்து நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும்.
கொள்கை கூட்டணி
இன்றைக்கு இருக்கும் நிலை என்ன என்று கேட்டால், 200 தொகுதிகள் அல்ல 200 தொகுதியையும் தாண்டி வரக் கூடிய அளவுக்கு, நம்முடைய கூட்டணி அமைந்து இருக்கிறது. 7 ஆண்டு காலமாக இந்த கூட்டணியை தொடர்ந்து கடைபிடித்து தேர்தல் களத்தில் நின்று வெற்றியை பெற்று வருகிறோம். இது கொள்கை கூட்டணி மட்டுமல்ல, மதச்சார்பின்மை கூட்டணி நிரந்தர கூட்டணி என்று அழுத்தமாக சொல்லி, நீங்கள் அனைவரும் ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொள்கிறேன். ஏழு ஆண்டுகள் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.