புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை உத்தரவு

1


பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் 'புல்லட்' என்று பெயரிடப்பட்ட யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி துவங்கியுள்ளது.


நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 35க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளது. இதில் 'புல்லட்' என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து குடியிருப்புகளை, இடித்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்கிறது.


கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளை சேதப்படுத்தியதுடன், மனிதர்களையும் தாக்கி கொன்றுள்ளது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் 40 வீடுகளை இடித்து வந்த நிலையில், வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆனால் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்துச் செல்ல வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கூடுதல் தலைமை வன பாதுகாவலர் நாகநாதன், "மக்கள் வன விலங்குகளுடன் ஒன்றிணைந்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். குடியிருப்புகளை இடித்து வரும் புல்லட் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இனி இந்த யானை குடியிருப்பு பகுதிக்குள் வராது அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன்," என தெரிவித்தார். மேலும் ஒரு வார காலம் கால அவகாசம் கேட்டிருந்தார்.


இந்த சூழலில், இன்று அதிகாலை 2 மணிக்கு காவயல் டான்டீ குடியிருப்பு பகுதிக்கு வந்த யானை தவமணி மற்றும் ஞானசேகர் ஆகிய இருவரது வீடுகளையும் இடித்தது. வீட்டில் இருந்தவர்கள் பின்பக்க கதவு வழியாக ஓடி உயிர் தப்பினார்கள்.

உடனடியாக உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் அய்யனார் தலைமையிலான குழுவினர், அப்பகுதிக்கு வந்து யானையை அங்கிருந்து துரத்தினார்கள். யானை குடியிருப்புகளை ஒட்டிய தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு இருப்பதால், தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.


தொடர்ச்சியாக குடியிருப்புகளை இடித்து வரும் இந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து செல்ல வலியுறுத்தி பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை உத்தரவிட்டுள்ளது.


வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு கூறுகையில், "புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க உத்தரவு கிடைத்துள்ளது. எனவே யானையை பிடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது", என்றார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.

தற்போது யானை சாமியார்மலையில் உள்ளதால், அதனை சமதளமான பகுதிக்கு விரட்டி செல்லும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement