மாணவி பெயருடன் முதல் தகவல் அறிக்கை வெளியானது சட்டவிரோதம்: அண்ணாமலை
சென்னை: அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி பெயர், முகவரி விபரங்களுடன் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது சட்டவிரோதம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, தி.மு.க., நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் கவர்னர் தமிழிசை, மாநிலத் துணைத் தலைவர் கருநாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது தி.மு.க, இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பு.
தி.மு.க.,வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.