சர்ச்சுக்கு சென்று வீடு திரும்பிய இரு வாலிபருக்கு அரிவாள் வெட்டு
செய்யூர்,செய்யூர் பகுதி வி.கே.ஆர்., நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் நவின், 22.
இவர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
கிருஸ்துமஸ் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தேவராஜபுரம் பகுதியில் உள்ள சர்ச்சுக்கு சென்று பிராத்தனை செய்தார். நேற்று அதிகாலை 2: 45 மணிக்கு தன் இருசக்கர வாகனத்தில் நண்பர் சச்சின் உடன் வீட்டிற்கு சென்றார்.
தேவராஜபுரம் செல்லியம்மன் கோவில் தெருவில் வந்த போது, தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த சுஜய், கிஷோர் குமார் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல், நவின் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி நவின் மற்றும் அவரது நண்பர் சச்சின் ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதில் நவினின் தலை, முதுகு, வலது கையிலும், சச்சினுக்கு மூக்கு, வாய் மற்றும் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவர்கள் அலறல் சத்தம்கேட்டு அப்பகுதியினர் இருவரையும் மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். தொடர் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து செய்யூர் போலீசார் நடத்திய விசாரணையில். கடந்த அக்டோபரில் சச்சினின் தங்கையை சுஜய், கிஷோர் குமார் ஆகிய இருவரும் கிண்டல் செய்துள்ளனர். சச்சின் தன் நண்பர்களுடன் சென்று சுஜய், கிஷோர் குமாரை தாக்கி உள்ளார்.
இதுகுறித்த புகாரில் செய்யூர் போலீசார் சச்சின் உட்பட மூவரை கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமினில் வந்துள்ளனர்.
இதற்கு பழிவாங்கும் விதமாக நேற்று நவின் மற்றும் சச்சினை சுஜய் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் வெட்டியது தெரிந்தது. செய்யூர் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய 10 பேரை தேடி வருகின்றனர்.