ஜல்லி பெயர்ந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி
காரிமங்கலம், டிச. 26-
காரிமங்கலம் அருகே, ஜல்லி பெயர்ந்த நிலையில் உள்ள தார்ச்சாலையால், வாகன ஓட்டிகள்
அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அடிலத்தில் இருந்து அ.சப்பாணிப்பட்டி வழியாக பெரியாம்பட்டி வரை, 5 கிலோ மீட்டர் துாரத்துக்கு தார்ச்சாலை உள்ளது. இச்சாலை வழியாக, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். மேலும், அடிலத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்ய, இச்சாலை வழியாக பெரியாம்பட்டிக்கு சென்று வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சாலை, தற்போது பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
அப்பகுதியினரும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி, அடிலம் பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி, ஜல்லி பெயர்ந்த நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.