மாணவிகளுக்கு பாதுகாப்பு; புதிய உத்திகளை கையாளுங்க; திருமா அறிவுரை
சென்னை: 'கல்லூரி, பள்ளி மற்றும் பல்கலை., வளாகத்தில் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க, தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். புதிய உத்திகளை கையாள வேண்டும்' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அண்ணா பல்கலையில் மாணவிக்கு நேர்ந்த நிகழ்வு அதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டது ஆறுதல் அளிக்கிறது. கல்லூரி, பள்ளி மற்றும் பல்கலை., வளாகத்தில் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க, தீவிர நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். புதிய உத்திகளை கையாள வேண்டும். அதற்கான ஒரு வழிகளை காணுகிற வாய்ப்பை இந்த குற்ற சம்பவம் உருவாக்கி தந்து இருக்கிறது.
ஆகையால், இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் கூடுதல் கவனம் செலுத்தி உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வழிகாட்ட வேண்டும். அ.தி.மு.க., பா.ஜ.,வினர் எதிர்க்கட்சியினர் என்ற முறையில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அம்பேத்கர் மீது அவர்கள் மனதில் எவ்வளவு வெறுப்பு இருக்கிறது என்று உரை மூலம் அமித்ஷா வெளிப்படுத்தி இருக்கிறார். உரிய நேரத்தில் அவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.