காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
ஈரோடு, டிச. 26--
காளிங்கராயன் வாய்க்காலில், இரண்டாம் போக பாசனத்துக்கு நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், ஈரோடு பகுதியை கடந்து தண்ணீர் சென்றது.
காளிங்கராயன் வாய்க்கால் பாசனப்பகுதியில் நடப்பு, 2024-25ம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்துக்கு பவானிசாகர் அணையில் இருந்து வரும் தண்ணீர், காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நேற்று காலை திறக்கப்பட்டது. நேற்று முதல் வரும், 2025 ஏப்., 23 வரை, 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மொத்தம், 5,184 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், நீர் இருப்பு, நீர் வரத்து, மழை பெய்வதற்கு ஏற்ப திறக்கின்றனர்.
இதன்படி நேற்று காலை, 6:00 மணிக்கு அணைக்கட்டில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில், 50 கனஅடியும், பின், 100 கனஅடியுமாக தண்ணீர் திறக்கப்பட்டது. ஏற்கனவே மழை நீர், பிற கழிவு நீர் வாய்க்காலில் தொடர்ந்து சென்று வந்த நிலையில், பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டதால் நேற்று காலை, 11:00 மணிக்குள் ஈரோட்டை கடந்து தண்ணீர் சென்றது.
காளிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டால், ஈரோடு பகுதியில் பல இடங்களில் பொதுமக்கள், சிறுவர்கள், இளைஞர்கள் குளிப்பதும், துணிகள் துவைப்பதுமாக இருப்பது வழக்கம். நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், மீண்டும் பழைய உற்சாகத்தை மக்கள் அனுபவிக்க துவங்கினர்.