முதல்வர் பதவி தேடி வந்தது: சொல்கிறார் பிரபல நடிகர்

மும்பை: ''எனக்கு முதல்வர் பதவியை தருவதாக கூறினார்கள். ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்டேன்,'' என பிரபல நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வில்லன் நடிகராக இருக்கும் சோனு சூட், கடந்த வருடம் கொரோனா முதல் அலை வந்த போதே பல்வேறு விதமான உதவிகளைச் செய்தார். அதைத் தொடர்ச்சியாக செய்து வருபவர், தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாவது அலையிலும் தன்னுடைய சோனு அறக்கட்டளை மூலமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் உதவிகளை அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், மும்பையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: எனக்கு முதல்வர் பதவி தருவதாக சொன்னார்கள். ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்டேன். உடனடியாக துணை முதல்வர் ஆகுமாறு கூறினார்கள். நாட்டின் பெரிய கட்சி தலைவர்கள் , ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக கூறினார்கள். அதனை ஏற்கும்படி வலியுறுத்தினார்கள். அரசியலில் நான் எதற்காகவும் போராட தேவை இருக்காது.

அரசியலில் இருந்து விலகியிருக்கவே விரும்புகிறேன். இதற்கு முக்கியமான காரணம் எனது சுதந்திரத்தை நான் இழக்க விரும்பவில்லை.
பணம் சம்பாதிக்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும் பலர் அரசியலுக்கு வருகின்றனர். இந்த இரண்டிலும் எனக்கு ஆர்வம் இல்லை. மக்களுக்கு உதவுவது என்றால், அதற்கு நான் தயாராக உள்ளேன். மற்றவர்களிடம் நான் எதையும் கேட்கவில்லை. யாருக்காவது உதவி செய்ய நினைத்தால், அதனை எனது சொந்த முயற்சியிலேயே செய்வேன்.

நான் யாருக்காவது கடமைப்பட்டு இருந்தால், அது எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எனது சுதந்திரம் பறி போகுமோ என்ற அச்சம் உள்ளது. அரசியலில் இணைந்தால், டில்லியில் பங்களா, உயர் பதவி, அதிக பாதுகாப்பு மற்றும் அரசு முத்திரையுடன் லெட்டர் பேட்கள் கிடைக்கும் என்றனர்.

இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், பின்னால் நடக்கும் நிகழ்வுகள் வேறு மாதிரி இருக்கும். அதற்காக நான் அரசியலுக்கு எதிரானவன் கிடையாது. அரசியல்வாதிகள் மீது மரியாதை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சோனுசூட்டின் சகோதரி, மாளவிகா சூட், 2022 ல் காங்கிரசில் சேர்ந்தார். பஞ்சாப் மாநிலம் மோகா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

Advertisement