கொலையில் முடிந்த ஒருதலைக் காதல்! கல்லூரி மாணவியை கொன்றவரை குற்றவாளியாக அறிவித்த கோர்ட்

9

சென்னை; சென்னையில், கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளிக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.



சென்னை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் கல்லூரி மாணவி சத்யப்பிரியா என்பவர் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு இளைஞர், சத்யப்பிரியாவை ஓடிக் கொண்டிருந்த ரயில் முன்பு தள்ளிவிட்டார். இதில் சத்யப்பிரியா உயிரிழக்க மர்ம நபரை போலீசார் கைது செய்தனர்.


விசாரணையில் அவரது பெயர் சதீஷ் என்பதும், கொல்லப்பட்ட கல்லூரி மாணவியை ஒருதலையாய் காதலித்தார் என்பதும் தெரிய வந்தது. மேலும், தம்முடன் பேச மறுத்ததால் ரயில் முன்பு அவரை தள்ளிவிட்டு கொன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 70 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. சென்னை அல்லிகுளம் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.


அதில், கைது செய்யப்பட்ட சதீஷ் குற்றவாளி என்பதை உறுதி செய்ய நீதிதன்றம், அவருக்கான தண்டனை விவரங்கள் வரும் (டிச.)30ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement