சமீர் மீண்டும் இரட்டை சதம்


வதோதரா: இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான, 'ஸ்டேட் டிராபி' ஒருநாள் போட்டித் தொடர் (23 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. வதோதராவில் நடந்த போட்டியில் விதர்பா, உ.பி., அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய விதர்பா அணிக்கு டேனிஷ் (142), கேப்டன் பைஸ் (100) கைகொடுத்தனர். விதர்பா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 406 ரன் குவித்தது.
இமாலய இலக்கைத் துரத்திய உ.பி., அணிக்கு ஷவுரியா (62), ஸ்வஸ்திக் (41) ஜோடி துவக்கம் தந்தது. பின் இணைந்த சோயப் சித்திக், கேப்டன் சமீர் ரிஸ்வி வேகமாக ரன் சேர்த்தனர். சமீபத்தில் 97 பந்தில் 201 ரன் எடுத்த சமீர் ரிஸ்வி, மீண்டும் மிரட்டினார். மறுபடியும் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
உ.பி., அணி 41.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 409 ரன் குவித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சமீர் ரிஸ்வி 105 பந்தில் 202 ரன் (18x6, 10x4), சித்திக் (96) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement