ஷாருக்கான் சதம்: தமிழகம் அபாரம்
விசாகப்பட்டனம்: விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணி 114 ரன்னில், உ.பி., அணியை வீழ்த்தியது. ஷாருக்கான் சதம் விளாசினார்.
இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் விஜய் ஹசாரே டிராபி ('லிஸ்ட் ஏ') 31வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று விசாகப்பட்டனத்தில் நடந்த டி பிரிவு போட்டியில் தமிழகம், உ.பி., அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி தலா 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
ஷாருக் கலக்கல்
தமிழக அணிக்கு ஜெகதீசன் (0), துஷார் ரஹேஜா (15) ஜோடி சுமார் துவக்கம் தந்தது. பிரதோஷ் ரஞ்சன் (0) கைவிட, பாபா இந்திரஜித் 27, விஜய் சங்கர் 16 ரன் எடுத்தனர். தமிழக அணி 68/5 என திணறியது.
அடுத்து இணைந்த ஷாருக்கான், முகமது அலி ஜோடி ரன் மழை பொழிந்தது. முகமது அரைசதம் கடந்தார். மறுபக்கம் ஷாருக்கான் சதம் விளாச, தமிழக அணி 47 ஓவரில் 284/5 ரன் குவித்தது. 5வது விக்கெட்டுக்கு 216 ரன் சேர்த்த ஷாருக்கான் 132 (7x6, 13x4), முகமது 76 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
எளிய வெற்றி
பின் களமிறங்கிய உ.பி., அணி பிரியம் கார்க் (48), கேப்டன் ரிங்கு சிங் (55) தவிர மற்றவர்கள் நீடிக்கவில்லை. உ.பி., அணி 32.5 ஓவரில் 170 ரன்னுக்கு சுருண்டு தோற்றது. தமிழகத்தின் சந்தீப், வருண் சக்ரவர்த்தி, விஜய் சங்கர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.