'மோதிய' கோலிக்கு அபராதம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) நேற்று மெல்போர்னில் துவங்கியது. இந்திய அணியில் சுப்மன் கில் நீக்கப்பட்டு, 'ஸ்பின் ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். கடந்த போட்டிகளில் 6வது இடத்தில் வந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவது உறுதியானது. ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். ஹேசல்வுட்டிற்கு பதிலாக ஸ்காட் போலந்து இடம் பெற்றார். 'டாஸ்' வென்ற கேப்டன் கம்மின்ஸ், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு 19 வயது இளம் கான்ஸ்டாஸ் அதிரடி துவக்கம் தந்தார். நேற்றைய போட்டியின் 10 ஓவர் முடிந்தவுடன் கோலி பந்தை எடுத்துக் கொண்டு, வேகமாக வந்தார். எதிரில் கையில் கிளவுசை கழற்றிக் கொண்டே வந்தார் கான்ஸ்டாஸ். அப்போது இருவரும் தோளில் இடித்துக் கொண்டனர். பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சக வீரர் கவாஜா, அருகில் இருந்த அம்பயர் வந்து சமாதானம் செய்தனர்.
கோலியின் செயல் விதிகளை மீறியது என்பதால் இதுகுறித்து 'மேட்ச் ரெப்ரி' புகார் தரப்பட்டது.
இதனால் சிட்னி டெஸ்டில் பங்கேற்க கோலிக்கு தடை விதிக்கப்படலாம் என செய்தி வெளியாகின. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,'' கோலி தனது தவறை ஒப்புக் கொண்டதால், விசாரணை நடத்தப்படவில்லை. இவருக்கு போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுகிறது. தவிர ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்படுகிறது,'' என தெரிவித்துள்ளது.
* கோலி டெஸ்ட் சம்பளம் ரூ. 15 லட்சம். 20 சதவீதம் அபராதம் (ரூ. 3 லட்சம்) என்பதால் ரூ. 12 லட்சம் தான் கிடைக்கும். தவிர 2019க்குப் பின் இப்போது தான் கோலி, தகுதி இழப்பு புள்ளி பெற்றுள்ளார்.
தொடர்ந்து இரு ஆண்டில் 4 தகுதி இழப்பு புள்ளி பெற்றால், ஒரு டெஸ்டில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

இது சகஜம்
கான்ஸ்டாஸ் கூறுகையில்,'' எதிர்பாராத விதமாக கோலி, என்மீது இடித்து விட்டார். கிரிக்கெட்டில் பதட்டமான நேரங்களில் இதுபோல ஏற்படுவது சகஜம் தான். இரு தரப்பிலும் உணர்ச்சி வசப்பட்டு விட்டோம் என நினைக்கிறேன்,'' என்றார்.

தேவையில்லாதது
இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில்,'' எதற்கும் ஒரு எல்லை உண்டு. இதை மீறக் கூடாது. கோலியின் செயல் தேவையற்றது. 'சீனியர்' வீரரான கோலியிடம் இருந்து இதுபோன்ற செயலை பார்க்க விரும்பவில்லை,'' என்றார்.

Advertisement