லாரி - கார் மோதல்; ஏற்றுமதியாளர், மகன் பலி

அவிநாசி; அவிநாசி அருகே பழங்கரை - தேவம்பாளையம் மாரியம்மன் கோவில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 43. அதே பகுதியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவந்தார். மிதுல் 12, ஜோஹித் 9, என இரு மகன்கள் உள்ளனர். இருவரும், அருகிலுள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். அதே பள்ளியில், குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அவிநாஷ் மகன் சரண்ஜித், 13, எட்டாம் வகுப்பு படித்துவருகிறார்.

திருப்பூர் அருகே ஆண்டிபாளையத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் நடந்த பேட்மின்டன் போட்டியில் பங்கேற்க ஜோஹித், சரண்ஜித் ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று காலை சங்கர் காரில் சென்றார். போட்டிகள் முடிந்து மூவரும் அவிநாசி நோக்கி வந்த போது, மங்கலம் ரோடு, வெங்கமேடு பிரிவு அருகே லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது.

பலத்த காயமடைந்த சங்கர் அதே இடத்தில் இறந்தார். படுகாயம் அடைந்த ஜோஹித், சரண்ஜித் ஆகியோர், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜோஹித் பலியானார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement