ஓட்டையான அ.தி.மு.க., கோட்டை தி.மு.க., - எம்.எல்.ஏ., பேச்சு

வடபழனி, சென்னை தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 130 வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் முன்னிட்டு 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற தலைப்பில், விளக்க உரை கூட்டம் வடபழனியில் நேற்று நடந்தது.

இதில், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், 133 வது வார்டு கவுன்சிலர் ஏழுமலை, 130 வட்ட செயலர் கமல், கட்சியின் மேலிட பேச்சாளர் சைதை சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது:

மக்கள் பணி செய்கிறது தி.மு.க., அரசு. 10 ஆண்டு ஆட்சியில் அ.தி.மு.க., எந்த பணியும் செய்யவில்லை.

அவர்கள் செய்தது கொள்ளையடிக்கும் பணி மட்டுமே. தி.நகர் தொகுதியில் முன்னாள் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கிற்காக நீதிமன்றம் சென்று உள்ளார்.

அ.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த தி.நகரை, ஓட்டையாக்கியது தி.மு.க., தொண்டர்கள் உழைப்புதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், 130 வது வார்டு கவுன்சிலர் பாஸ்கர் பேசுகையில், ''வடபழனியில் 40 ஆண்டு பிரச்னைக்கு தீர்வாக, கங்கையம்மன் கோவில் தெரு கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள, அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க., வேட்பாளரை 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார்.

சென்னை தென் மேற்கு மாவட்ட செயலரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு பேசுகையில், ''தி.மு.க., 75ம் ஆண்டை கொண்டாடுகிறது. நுாற்றாண்டு ஆட்சியை செய்ய உதயம் எடுத்தவர் தான் துணை முதல்வர் உதயநிதி,'' என்றார்.

Advertisement