மது அருந்தியதை கண்டித்த போலீஸ் ஏட்டுக்கு 'பளார்'

சென்னை,
திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ரமேஷ், 45. இவர், கொரட்டூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார்.

இவர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அதிகாலை 12:05 மணியளவில், கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையில் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் 'ஹோண்டா ஐ20' கார் நின்றது.

அதில், ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண்கள் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களை ரமேஷ் கண்டித்துள்ளார். அப்போது, இருதரப்பிற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், காரில் அமர்ந்திருந்த இளம்பெண்களில் ஒருவர் ரமேஷின் கன்னத்தில் 'பளார்' என அறைவிட்டு, வாயில் குத்தியதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மற்றொரு போலீஸ்காரர் அரவிந்த், ரமேஷை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

தொடர் விசாரணையில், காரில் இருந்து மது அருந்தியது கொளத்துாரைச் சேர்ந்த சையத் பாஷா, 35, நிவேனிதா, 25, வடபழனியைச் சேர்ந்த ஹேமா, 25, என்பது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலையில் மது போதையில் அட்டூழியத்தில் ஈடுபடும் ஆசாமிகள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஆனால், தலைமை காவலரை, கன்னத்தில் அறைந்து, வாயில் குத்துவிட்ட இளம்பெண் மீது வழக்கு பதியாமல் இருப்பதும், அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்பதைபோல் காட்டுகொள்வதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Advertisement