கற்பனை ஸ்வரங்களில் அபிஷேக் அலங்கரிப்பு
ரசிகா பைன் ஆர்ட்ஸ் சார்பில், மேற்கு மாம்பலத்தில் நடந்த கச்சேரியில், கவுளை ராகம், ஆதி தாளத்தில் திருவொற்றியூர் தியாகய்யர் இயற்றிய 'செலிமி கோரி' வர்ணத்தை வைத்து ஆரம்பித்தார், அபிஷேக் ரகுராம்.
ஹம்சத்வனி ராகத்தின் அனைத்து ப்ரயோகங்களையும் பயன்படுத்தி, சிறப்பான ராக ஆலாபனையாக அபிஷேக் தொடுக்க, கார்த்திக் நாகராஜ், தன் வயலினில் அதை சிறப்பாக்கினார்.
'பார்வதி பதீம்' என்ற ஹம்சத்வனி ராகத்தில், ஆதி தாளத்தில் தீட்சிதரால் இயற்றப்பட்ட கிருதியை கற்பனை ஸ்வரங்களோடு, கோர்வைகளையும் சேர்த்துஇசைத்து வழங்கினார். பின், தேவாமிருத வர்ஷினி ராகத்தில் தியாகராஜர் இயற்றிய 'எவரானி நிர்னயி' எனும் ரெட்டை கவுளை ஆதி தாள கிருதியை விறுவிறுப்பாக பாடினார்.
தீபகம் ராகத்தில், சிறு ஆலாபனையாக வழங்கி, 'களல நேர்சினா முனு' என்ற கிருதியை கற்பனை ஸ்வரங்கள் வாயிலாக அலங்கரித்தார்.
'சீதையின் நாயகனே நம்பினோரை காப்பவனே, ரகு குலத்திலகமே, ராமா' என, ராமனின் பல கருணை பக்கங்களை விளக்கும் 'சீதா நாயகா' என்ற கிருதியை, ராக ஆலாபனையோடு துவங்கினார்.
ரீத்தி கவுளை ராகம், மிஸ்ர சாபு தாளத்தில் அமைந்த இக்கிருதிக்கு, நிரவல் மற்றும் கற்பனை ஸ்வரங்களை பாடி, சபையினரை உச்சு கொட்ட வைத்தார்.
ஒரு மென்மையான, அன்பான உணர்வுடன் மகிழ்ச்சியான வணக்கத்தின் மனநிலையை பிரதிபலிக்கும் ராகமான தோடி ராகத்தில், 'சதாசிவ பஜனமே' என்ற கிருதியை இசைத்தார்.
'மா ஜானகி' என்ற காம்போஜி ராகக் கிருதியை, ராக ஆலாபனை, நிரவல், கற்பனை ஸ்வரங்கள், குறப்பு ஸ்வரங்கள், சர்வலகு மற்றும் கோர்வையில் பாட, தனி ஆவர்த்தன பகுதியை மிருதங்கத்தில் சுமேஷ் நாராயணன், கஞ்சிராவில் குருபிரசாத் திறம்பட போட்டிப்போட்டு வழங்கி, கச்சேரியை அமர்க்களப்படுத்தினர்.
- ரா.பிரியங்கா