சட்ட விரோதமாக 3,210 யூரியாமூட்டை; அதிகாரிகள் விசாரணை
வெள்ளகோவில், டிச. 27-
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், பச்சாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அத்தாம்பாளையத்தில், தனியாருக்கு சொந்தமான ரமேஷ், 50, என்பவரின் காட்டன் மில் இயங்கி வருகிறது. இதன் அருகில் உள்ள குடோனில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும், 45 கிலோ எடை கொண்ட யூரியா, 3,210 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.இவைகளை ரமேஷ், அவரது சகோதரர் தாமரைக்கண்ணண் இருவரும் வெவ்வேறு இடங்களில் மானிய விலையில் வாங்கி, யூரியாவை வேறு நிற பைகளில் போட்டு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக தெரிய வருகிறது.
சம்பவ இடத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும், யூரியா மூட்டைகளை மானிய விலையில் (45 கிலோ மூட்டை ரூ.266.50) பெற்று, அதை வெளிமார்க்கெட்டில் ஒரு மூட்டை குறைந்தபட்சம், 1,500 ரூபாய் வரை விற்று வருவதாக புகார் வந்தது.
கோவை வேளாண்மை துறை தரக்கட்டுப்பாட்டு அலுவலர் சக்திவேல் தலைமையில், ஈரோடு வேளாண்மை துறை உதவி இயக்குனர் சரஸ்வதி, திருப்பூர் வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலர் சீதா, வெள்ளகோவில் வேளாண்மை அலுவலர் சுவாதிகா ஆகியோர் குடோனில் உள்ள யூரியா மூட்டைகளை ஆய்வு செய்தனர். இதில், யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கிவைத்து அதை லாபநோக்கத்தோடு, ஏற்றுமதி செய்வது தெரிய வந்தது. ஈரோடு உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன், திருப்பூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.