அன்று பொங்கிய போராளிகள் எங்கே?: இன்று கண் மூடி, வாய் பொத்தி மவுனம் காப்பது ஏன்?
தமிழகத்தை காக்க வந்த ‛‛ஆபத்பாந்தவனாக''வும் அனாதை ரட்சகனாகவும் தங்களை நினைத்துக்கொண்டு, சென்ற அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு எதற்கெடுத்தாலும் கண்டன ‛‛கவுன்ட்டர்'' கொடுத்துக்கொண்டு இருந்த ‛‛மாண்புமிகு'' நடிகர்கள், இயக்குனர்கள், நாட்டுப்புற பாடகர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள்?.
தலைநகர் சென்னையில், நட்டநடு நகருக்குள், ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தின் வளாகத்திற்குள் ஒரு மாணவி மானப்பங்கப்படுத்தப்பட்டுள்ளார். இந்த காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டு தமிழகமே தலைகுனிந்து நிற்கிறது. நாகரீக சமுதாயம் என்று பீற்றிக்கொள்ளும் நாம் முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது என்று தெரியாமல் விழிக்கிறோம்.
பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் சமூகம் என்று இன்னொரு உருட்டையும் உருட்டிக்கொண்டு ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தி இருக்கிறோம். ஈவு இரக்கம் இல்லாத ராட்சஷனைப் போல் நடந்துகொண்டு இருக்கிறோம்.
அதிமுக ஆட்சியின்போது பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோது, அதைக் கண்டிப்பதற்கு வரிசை கட்டிக்கொண்டு வந்தார்கள் இந்த சினிமா நடிர்களும் இயக்குனர்களும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் இவர்களுக்கு கண்கள் தெரிவதில்லை, காதுகள் கேட்பதில்லை, மூளையும் சிந்திப்பதில்லை. இது ஒரு பட்டவர்த்தமான ஓரவஞ்சனை இல்லையா?. இவர்களுக்குப் பிடிக்காத கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டும், தாம் துாம் என்று ‛‛மைக்''குகள் தெறிக்க ‛‛சவுண்டு'' விடுவார்கள். பிடித்த கட்சி ஆட்சியில் இருந்தால் என்ன அநியாயம் நடந்தாலும் ஆழ்கடல் அமைதி காப்பார்கள்.
நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, சித்தார்த், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் பா.ரஞ்சித், நாட்டுப்புற பாடகர் கோவன், கானா பாடகி இசைவாணி போன்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?.
‛‛திராவிடம்'' ‛‛தமிழ்ப்பற்று'', ‛ஹிந்தி தெரியாது போடா'' என்று வாய் கிழிய பேசும் இவர்களுக்கு பாதிக்கப்பட்ட பல்கலை மாணவியும் ஒரு தமிழச்சி என்பது மட்டும் மறந்து போகிறதே எப்படி?.
இதில் இருந்து ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. இவர்களுக்கு தேவை, ‛‛பப்ளிசிட்டி''யும், புகழ் வெளிச்சமும் மட்டுமே. மொழி, இன வெறியை துாண்டிவிட்டு அதில் குளிர் காய்பவர்கள். அதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தை வைத்து பணம் சம்பாதிப்பவர்கள்.
திமுக ஆட்சியின்போது நடக்கும் குற்றங்களை கண்டிக்க திராணியவற்றவர்கள். அப்படி கண்டித்தால், தங்களைப் பற்றிய வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறி விடுமோ என்று அஞ்சுபவர்கள். ஒருவேளை தங்களது படம் ரிலீசாகாமல் போய்விடுமோ என்ற பயமா? அல்லது வடிவேலுவின் சினிமா வாழ்க்கை 7 ஆண்டுகள் முடங்கி போனது போல ஆகிவிடுமோ என்ற பயமா? இப்படி பயப்படுபவர்கள் எதற்காக தங்களை சந்தர்ப்பவாத போராளிகள் போல காட்டிக்கொள்ள வேண்டும்?
இவர்களையும் தங்கள் ‛‛ஹீரோ''க்களாக நினைத்துக்கொண்டு இருக்கும் தமிழ் மக்கள் தான் பாவம். இந்த ஹீரோக்களின் முகமூடி மீண்டும் கிழிந்திருக்கிறது என்பதை இனிமேலாவது இந்த மக்கள் உணர்ந்துகொள்வார்களா?