அயலக தமிழர் தின கொண்டாட்டம் பங்கேற்பாளர் பதிவு துவக்கம்
சென்னை:தமிழக அரசு சார்பில், அடுத்த மாதம் நடக்க உள்ள, அயலக தமிழர் தினத்தில் பங்கேற்போருக்கான பதிவு, நேற்று துவங்கியது.
அரசு அறிக்கை:
நான்காவது அயலக தமிழர் தினம், ஜன., 11 மற்றும் 12ம் தேதிகளில், 'எத்திசையும் தமிழணங்கே' என்ற தலைப்பில் கொண்டாடப்பட உள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர் தலைமையில், நேற்று நடந்தது.
அயலக தமிழர் தினத்தின் முக்கிய அம்சமாக, புலம்பெயர் தமிழ் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில், எட்டு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளன. அயலக சூழலில் தலைசிறந்து விளங்கும் தமிழருக்கு, 'தமிழ் மாமணி விருது' வழங்கப்பட உள்ளது. கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
குறு, சிறு தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தமிழ் சங்கங்கள், வணிக சங்கங்கள், தமிழர் வியாபாரத்தை சேர்ந்த பிற நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை, கண்காட்சியில் காட்சிப்படுத்தலாம்.
கண்காட்சி அரங்கங்களுக்கான முன்பதிவு, நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கான முன்பதிவு நடந்து வருகிறது. பதிவு மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, https://nrtamils.tn.gov.in இணையதள முகவரியை காணவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.