கிணற்றில் தள்ளி விவசாயி கொலை செஞ்சி அருகே இருவர் கைது

அவலூர்பேட்டை : விவசாயியை கிணற்றில் தள்ளி கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ஏழுமலை, 45; விவசாயி.

இவரை, டிச., 21ம் தேதி அதிகாலை 5:45 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் சிவக்குமார், 44; என்பவர் டிராக்டர் ஓட்ட அழைத்து சென்றார்.

அன்று இரவு ஏழுமலை வீடு திரும்பாததால், அவரது மனைவி சுமதி,35; தனது கணவரை காணவில்லை என 22ம் தேதி அளித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அதில், சிவக்குமார் ஏழுமலையை வேலைக்கு பைக்கில் அழைத்து சென்றபோது வழியில் வந்த அதே ஊரைச் சேர்ந்த கரியன் மகன் முனுசாமியையும் அழைத்து சென்றார்.் அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும், பைக்கை நிறுத்தவிட்டு சண்டை போட்டனர். அப்போது, முனுசாமி தள்ளியதில், ஏழுமலை அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்துள்ளார். உடன், முனுசாமியும், சிவக்குமாரும் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அதன்பேரில் தலைமறைவாக இருந்த முனுசாமி, சிவக்குமார் ஆகிய இருவரையும் வளத்தி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement