ஹிமாச்சலில் பனிப்பொழிவு; சிக்கி தவித்த 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மீட்பு
குலு: ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் சிக்கித் தவித்த 5,000 சுற்றுலாப் பயணிகள் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மீட்கப்பட்டனர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இதுவரை இல்லாத கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சாலைகளில் பனி மூடியதன் காரணமாக, போக்குவரத்து முடங்கியது. அங்கு வெப்பநிலை மைனஸ் 7 டிகிரியாக பதிவானது. அதேநேரத்தில், ஆங்கில புத்தாண்டு எதிரொலியாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஹிமாச்சல பிரதேசத்தில் குவிந்துள்ளனர்.
சிம்லா, மணாலி உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றன. குலுவில் உள்ள சோலாங் நாலா என்ற பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், சிக்கிய 5,000 சுற்றுலாப் பயணிகளை போலீசார் மீட்டனர். இது குறித்து புகைப்படங்களை, பகிர்ந்து போலீசார் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
பனிப்பொழிவு காரணமாக, 1000 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிற வாகனங்கள் சோலாங் பகுதியில் சிக்கிக்கொண்டன. இந்த வாகனங்களில் 5,000 சுற்றுலா பயணிகள் இருந்தனர். வாகனங்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.