'பார்முலா - இ' கார் பந்தய வழக்கு முன்னாள் முதல்வர் மகனுக்கு சிக்கல்
ஹைதராபாத் : 'பார்முலா - இ' கார் பந்தயத்தில் 55 கோடி ரூபாய் முறைகேடு நடந்த விவகாரத்தில், தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திர சேகர ராவின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் நேரில் ஆஜராக, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
பண மோசடி
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. முன்னதாக, பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின் போது, சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தார்.
அவரது மகனும், அக்கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமராவ், 48, அமைச்சராக இருந்தார். அப்போது, பிரசித்தி பெற்ற 'பார்முலா - இ' கார் பந்தயம் நடத்தப்பட்டது.
இதற்காக அந்த நிறுவனத்துக்கு, 55 கோடி ரூபாய் வெளிநாட்டு பணமாக தரப்பட்டது. இது தொடர்பாக, ராமராவ் உட்பட மூன்று பேர் மீது தெலுங்கானா ஊழல் தடுப்பு போலீசார் சமீபத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
பண மோசடி எனக் கூறப்பட்டதை அடுத்து, இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது.
குற்றச்சாட்டு
இது தொடர்பாக, சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, வரும் 7ம் தேதி நேரில் ஆஜராகும்படி ராமராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி அரவிந்த் குமார், வரும் 2ம் தேதியும், ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணைய முன்னாள் தலைமை பொறியாளர் பி.எல்.என். ரெட்டி, 3ம் தேதியும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த ராமராவ், “பந்தயம் நடத்தப்பட்டதற்காக 55 கோடி ரூபாய் பணம் நாங்கள் கொடுத்துள்ளோம். அதற்கு அந்த நிறுவனம் ஒப்புதலும் அளித்துள்ளது.
''ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றப்பட்டு உள்ளது. இது நேரடி கணக்கு. இதில் எங்கே ஊழல் நடந்துள்ளது,” என கேள்வி எழுப்பி உள்ளார்.