பெங்களூருவிடம் வீழ்ந்தது சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ஏமாற்றம்

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய சென்னை அணி 2-4 என பெங்களூருவிடம் தோல்வியடைந்தது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 11வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின.

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் ரியான் வில்லியம்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 19வது நிமிடத்தில் சென்னை அணியின் இர்பான் யாத்வத் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின் 43வது நிமிடத்தில் பெங்களூரு கேப்டன் சுனில் செத்ரி ஒரு கோல் அடித்தார். இதற்கு 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+2வது நிமிடம்) சென்னையின் லால்ரின்லியானா ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவு 2-2 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு அணிக்கு ரியான் வில்லியம்ஸ் (68வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்தார். பின் 82வது நிமிடத்தில் சென்னையின் லால்டின்லியானா 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார். ஆட்டநேர முடிவில் சென்னை அணி 2-4 என தோல்வியடைந்தது.


ஐதராபாத்தில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் ஐதராபாத், ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது.

இதுவரை 14 போட்டியில், 4 வெற்றி, 3 'டிரா', 7 தோல்வி என 15 புள்ளிகளுடன் சென்னை அணி 9வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 27 புள்ளிகளுடன் (8 வெற்றி, 2 'டிரா', 2 தோல்வி) 2வது இடத்தில் நீடிக்கிறது.

Advertisement