எழுத்து மூலம் விழிப்புணர்வு 'க்ளிக்' முரளியின் ஆசை

கேமரா... ஒரு காட்சியை 'க்ளிக்' என படம் எடுப்பது போல, இயற்கையை மனதில் படமாக்குவது நம் கண்கள். அக்கண்கள் மூலம், தான் பார்க்கும் காட்சிகளை எளிய சொற்களால் சமூக சிந்தனை நிறைந்த சிறுகதைகள், கவிதைகள் என எழுதும் 'க்ளிக்' மதுரை முரளி, தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம் பகிர்ந்தவை...

பள்ளிப் பருவத்தில் இருந்தே புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு. எழுத்தாளர்கள் லட்சுமி, சுஜாதா, சாண்டில்யன், ராஜேஷ் குமாரின் கதைகளை அதிகம் வாசித்ததால் 'நாமும் இவர்களை போல எழுத வேண்டும்' என உந்துதல் கிடைத்தது. சிறு துணுக்குகள் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். நான் எழுதிய முதல் நாடகம் 'நல்லதோர் வீணை' வரவேற்பை பெற்றது. அதில் கிடைத்த பாராட்டும், அங்கீகாரமும் மேலும் எழுத உத்வேகம் தந்தது.

1995ல் ரயில்வேயில் பொறியாளராக பணியில் சேர்ந்த போதும் எழுத்தின் மீதான ஆர்வம் குறையவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதினேன். 30 ஆண்டுகள் ரயில்வேயிலும், எழுத்து துறையிலும் தண்டவாளம் போல இணையாக பணியாற்றினேன்.

முன்பு வானொலியில் தான் செய்தி, பாட்டு, கதைகள் கேட்பர். எனது நாடகங்கள் முதலில் ஒலிபரப்பானதும் பிரசவத்திற்கு பின் தாய் அடையும் அளப்பரிய மகிழ்ச்சி கிடைக்கும். எனது முதல் சிறுகதை தொகுப்பு அகில இந்திய வானொலியில் 'மறியல்' எனும் 10 நிமிட சிறுகதையாக வெளியானது. விதை விதைத்தவன் வினை அறுப்பான் எனும் அடிப்படையில் அக்கதையை எழுதினேன். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான் எழுதிய 'குடி குடியை கெடுக்கும்', 'அம்மா', 'சலனம்', 'முடிவில் ஒரு தொடக்கம்' என 30க்கும் மேற்பட்ட நாடகங்கள் வானொலியிலும், 'பர்ஸ்', 'ரோஜா முள்' ஆகிய கவிதை தொகுப்புகள் பத்திரிக்கையிலும் வெளியாகின. இதுவரை 500க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளேன்.

தினமலர் நாளிதழில் 'என் பார்வை' பகுதியில் எனது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. 3 புதுக்கவிதை தொகுப்புகள், ஒரு வானொலி நாடகத் தொகுப்பு, 2 இருநிமிட சிறுகதைகள், 5 சிறுகதை தொகுப்புகள் என பல புத்தகங்களை எழுதியுள்ளேன். 2018ல் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'க்ளிக் கவிதைகள்' புத்தகத்தை எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் வெளியிட்டார்.

எழுத்தாளர் எழுதுவதற்கு முன் பல எண்ணங்கள் தோன்றலாம். இயற்கை, மனிதர்கள், விலங்குகள், பிரபஞ்சம் என ஏதேனும் ஒரு தலைப்பில் தங்கள் கற்பனை திறனுடன் சேர்த்து எழுதுவார்கள்.

எனது படைப்புகள் சமூக பிரச்னைகளை பேசுவதாக, வெளிப்படையாக தெரிவிக்கும் பாணியில் இருக்கும். எழுத்தின் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எனதுகுறிக்கோள்.

ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளில் சிறிய நுாலகம் அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கு புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்ல வேண்டும். அப்புத்தகங்கள் பற்றி ஒரு மணி நேரமாவது அவர்களிடம் பெற்றோர் பேச வேண்டும். புத்தக கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் அனைத்து ஊர்களிலும் நடத்த வேண்டும். கல்லுாரிகளில் மாணவர்களிடம் கலந்துரையாட பல்வேறு எழுத்தாளர்களை அழைக்க வேண்டும். அப்போது தான் நுால் படிக்கும் பழக்கம் இளையதலைமுறையை விட்டு போகாது என்றார்.

இவரை வாழ்த்த 94421 63972

Advertisement